Students can Download 8th Tamil Chapter 3.5 எச்சம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.5 எச்சம்
கற்பவை கற்றபின்
Question 1.
‘வந்த’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.
(எ.கா.) வந்த மாணவன்.
வந்த மாடு.
Answer:
(i) வந்த குழந்தை
(ii) வந்த சிறுவன்
(iii) வந்த தாத்தா
(iv) வந்த மாணவர்கள்
(v) வந்த மழை
(vi) வந்த திரைப்படம்
(vii) வந்த அம்மா .
Question 2.
‘வரைந்து’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.
(எ.கா.) வரைந்து வந்தான்.
வரைந்து முடித்தான்.
Answer:
(i) வரைந்து பார்த்தான்.
(ii) வரைந்து வைத்தான்.
(iii) வரைந்து கொடுத்தான்.
(iv) வரைந்து வியந்தான்.
(v) வரைந்து மகிழ்ந்தான்.
(vi) வரைந்து கற்றான்.
(vii) வரைந்து தெளிந்தான்.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் …………… எனப்படும்.
அ) முற்று
ஆ) எச்சம்
இ) முற்றெச்சம்
ஈ) வினையெச்சம்
Answer:
ஆ) எச்சம்
Question 2.
கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் …………………
அ) படித்து
ஆ) எழுதி
இ) வந்து
ஈ) பார்த்த
Answer:
ஈ) பார்த்த
Question 3.
குறிப்பு வினையெச்சம் ……………….. வெளிப்படையாகக் காட்டாது.
அ) காலத்தை
ஆ) வினையை
இ) பண்பினை
ஈ) பெயரை
Answer:
அ) காலத்தை
பொருத்துக
1. நடந்து – முற்றெச்சம்
2. பேசிய – குறிப்புப் பெயரெச்சம்
3. எடுத்தனன் உண்டான் – பெயரெச்சம்
4. பெரிய – வினையெச்சம்
Answer:
1. நடந்து – வினையெச்சம்
2. பேசிய – பெயரெச்சம்
3. எடுத்தனன் உண்டான் – முற்றெச்சம்
4. பெரிய – குறிப்புப்
பெயரெச்சம் கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம் வினையெச்சம் என வகைப்படுத்துக
நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய , பிடித்து, அழைத்த, பார்த்து.
சிறுவினா
Question 1.
எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
Answer:
(i) பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.
(ii) இது பெயரெச்சம் , வினையெச்சம் என்று இருவகைப்படும்.
(எ.கா.) படித்த மாணவன்.
படித்த பள்ளி.
Question 2.
அழகிய மரம்’ – எச்ச வகையை விளக்குக.
Answer:
(i) அழகிய மரம் – பெயரெச்சம்.
(ii) பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ஆகும்.
(iii) இத்தொடரில் ‘அழகிய’ என்ற மரம் பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்ததால் பெயரெச்சமாயிற்று.
Question 3.
முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
Answer:
ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.
(எ.கா.) வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள். இத்தொடரில் படித்தனள் என்னும் வினைமுற்றுச் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. எனவே இது முற்றெச்சம் ஆகும்.
Question 4.
வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.
Answer:
வினையெச்சத்தின் வகைகள் : வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இரு வகைப்படும்.
(i) தெரிநிலை வினையெச்சம் :
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
(எ.கா.) எழுதி வந்தான். இத்தொடரில் எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.
(ii) குறிப்பு வினையெச்சம் :
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
(எ.கா.) மெல்ல வந்தான். இத்தொடரில் மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது.
மொழியை ஆள்வோம்
கேட்க :
Question 1.
உடல்நலம் குறித்த விழிப்புணர்வு உரைகளின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக
உணவே மருந்து
அனைவருக்கும் வணக்கம்!
மக்கள் அனைவரும் நெடுநாள் வாழவே விரும்புவர். நெடுநாள் வாழ நல்ல உடல் வேண்டும். எனவேதான் திருமூலர், ‘உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே’ என்று பாடியுள்ளார். உடல் வளர்ச்சிக்குத் தேவையான உணவு, உடலைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும்.
உயிர் வாழ்வதற்கு உணவு இன்றியமையாதது. நாம் உண்ணும் உணவு உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது. தேய்ந்து போகும் திசுக்களைப் புதுப்பிக்கின்றது. மூளை, இதயம், நுரையீரல் முதலான உடல் உறுப்புகள் தத்தம் தொழிலைத் தவறாது செய்து வர நமக்குப் பல்வேறு சத்துகள் தேவைப்படுகின்றன. அவற்றையெல்லாம் நாம் உணவின் வழியாகத்தான் பெற வேண்டும்.
எல்லாச் சத்துகளும் கிடைக்கும்படியாக நம் உணவுப் பழக்கம் அமைய வேண்டும். ஆனால் நாம் நாகரிகம் என்னும் பெயரால் பின்பற்றும் மேற்கத்திய உணவு முறைகள் பெருமளவு கொழுப்புச் சத்தையே கொண்டவையாகும். மேற்கத்திய உணவு வகைகளில் நமக்குத் தேவையான நார்ச்சத்துகளும் நீர்ச்சத்துகளும் கிடைக்காது.
மேற்கத்திய உணவுகளை உண்ணுவதால் நோய்கள் நம்மிடம் ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும். விரைவு உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவது, பொட்டலப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை வாங்கிக் கொறிப்பது, புட்டிகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை அருந்துவது தவறு. இவற்றில் உள்ள கொழுப்புச் சத்தும் சுவையூட்டச் சேர்க்கப்படும் வேதிப் பொருள்களும் உடலுக்கு ஊறு செய்பவையாகும். இவற்றை உண்பது காசைக் கொடுத்து நோயை வாங்குவதற்கு இணையாகும்.
நம் ஊரில் கிடைக்கும் எல்லாக் காய்கறிகளையும் பழ வகைகளையும் வாங்கிக் சாப்பிடுவதுதான் சிறந்தது. நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச்சத்துகள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற நமக்குத் தேவையான சத்துகளைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும்.
நாச்சுவை கருதி உண்ணாமல், உடல் நலங்கருதி உண்ணுதலே நல்லது. உணவை விரைவாக விழுங்குதல் கூடாது. நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும். அப்போதுதான் வாயிலுள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலக்கும்.
உமிழ்நீர் கலக்காத உணவு உள்ளே சென்றாலும் அது செரிக்காது. குடலும் தன் செரிமான ஆற்றலை இழந்து விடும். உணவின் சத்துகள் வீணாகாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து உண்ணுதல் வேண்டும்.
தண்ணீ ரும் மருந்தே. ‘நீரின்றியமையாது உலகு’ என்பது வள்ளுவம். இயற்கை உணவுப் பொருள்களில் நீரில்லாத உணவுப் பொருள்களே இல்லை. எல்லா வகையான உணவுப் பொருள்களும் விளைவதற்கு நீர் காரணமாக அமைகிறது.
வெப்பம் மிகுந்த கோடைக்காலத்தில் வெள்ளரிக்காய், பப்பாளிப் பழம், முலாப்பழம் முதலானவற்றைச் சாப்பிடலாம். இளநீர் பருகலாம். நீர்மோர் அருந்தலாம். இவை கோடைக்காலத்தில் நம் உடலை வெப்புநோய் முதலானவை அணுகாமல் காப்பாற்றும். கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் மருத்துவக் குணமும் இருப்பதால் உணவே மருந்து என்று கூறுவது பொருத்தமாகிறதல்லவா?
‘பசித்துப் புசி’ என்பதனை மனதில் வைத்து பசித்தப் பின் உண்ணுவதனையும் அளவோடு உண்ணுதலையும் வழக்கமாகக் கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் நாம் நோயற்ற வாழ்வை வாழலாம்.
சொல்லக்கேட்டு எழுதுக
நலமான உடலுக்கு இரண்டுவேளை சிற்றுண்டியும் ஒருவேளை பேருண்டியும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவையே உடல்நலம் பேணும் வழிமுறைகளாகும்.
அறிந்து பயன்படுத்துவோம்
உவமைத் தொடர்கள்
நாம் பேச்சிலும் எழுத்திலும் கருத்துகளை எளிதாக விளக்குவதற்காகச் சில தொடர்களைப் பயன்படுத்துவோம். அவை உவமைத் தொடர்கள் எனப்படும். ஒவ்வொரு உவமைத் தொடருக்கும் தனிப் பொருள் உண்டு.
(எ.கா.) 1. மடை திறந்த வெள்ளம் போல – தடையின்றி மிகுதியாக.
திருவிழாவைக் காண மடை திறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.
2. உள்ளங்கை நெல்லிக்கனி போல – வெளிப்படைத் தன்மை
பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும்.
பொருத்துக:
1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – ஒற்றுமையின்மை
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – பயனற்ற செயல்
3. பசு மரத்து ஆணி போல – தற்செயல் நிகழ்வு
4. விழலுக்கு இறைத்த நீர் போல – எதிர்பாரா நிகழ்வு
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – எளிதில் மனத்தில் பதிதல்
Answer:
1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல ‘ – தற்செயல் நிகழ்வு
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – எதிர்பாரா நிகழ்வு
3. பசு மரத்து ஆணி போல – எளிதில் மனத்தில் பதிதல்
4. விழலுக்கு இறைத்த நீர் போல – பயனற்ற செயல்
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – ஒற்றுமையின்மை
உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.
Question 1.
குன்றின் மேலிட்ட விளக்கைப் போல
Answer:
காந்தியடிகளின் புகழ், குன்றின் மேலிட்ட விளக்குப் போல் உலகெங்கும் ஒளிவீசுகின்றது.
Question 2.
வேலியே பயிரை மேய்ந்தது போல
Answer:
வேலியே பயிரை மேய்ந்தது போல் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே தவறு செய்கிறார்கள்.
Question 3.
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
Answer:
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் நான் எதிர்பார்க்காமலேயே என் பிறந்த நாளுக்கு எனக்குப் புத்தாடை வாங்கித் தந்தார் என் அப்பா, என் மாமா மிதிவண்டி வாங்கித் தந்தார்.
Question 4.
உடலும் உயிரும் போல
Answer:
கந்தனும் குமரனும் உடலும் உயிரும் போல எப்போதும் ஒருவரை ஒருவர் பிரியாமல் இணைந்தே இருப்பார்கள்.
Question 5.
கிணற்றுத் தவளை போல
Answer:
கந்தன் கிணற்றுத் தவளை போல நாட்டு நடப்புகளை அறியாமல் இருந்தான்.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
முன்னுரை – நோய் வரக் காரணங்கள் – நோய் தீர்க்கும் வழிமுறைகள் – வருமுன் காத்தல் – உணவும் மருந்தும் – உடற்பயிற்சியின் தேவை – முடிவுரை
முன்னுரை :
நம்மிடம் என்னதான் கல்வி, செல்வம் முதலியவை இருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும். உடல் நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்புடைய சொத்துக்குச் சமமானதாகும். அவ்விதம் நோயற்ற வாழ்வினை வாழ நாம் செய்ய வேண்டியனவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நோய் வரக் காரணங்கள் :
இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு. உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்குக் காரணமாகும். துரித உணவுக் கலாச்சாரத்தில் மூழ்கியதே பல நோய்கள் வருவதற்குக் காரணம்.
மாசு நிறைந்த சுற்றுச்சூழலும் நோய்க்குக் காரணமாகின்றது. இயற்கை வேளாண்மையை மறந்து, நல்ல விளைச்சல் வேண்டி நவீன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி நிலத்தையும் மாசுபடுத்திவிட்டோம். இவ்வகை உணவினால் நோய்கள் அணுகுவதற்கு நாமே காரணமாகிவிட்டோம்.
நோய் தீர்க்கும் வழிமுறைகள் :
நாம் உண்ணும் உணவின் அளவை அறிந்து உண்ணுவது, சரியான உடற்பயிற்சி – மேற்கொள்வது, நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் திட்டமிட்டுச் செயல்களைச் செய்வது, நோயின் நிலை அறிந்து அதற்கேற்ற உணவையும் மருந்துகளையும் உட்கொள்ளுதல் போன்றவை நோயைத் தீர்க்கும் வழிமுறைகள் ஆகும்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். அப்போதுதான் நோய்கள் நம்மை அணுகாது. வீட்டின் உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் சுத்தத்தைப் பேண வேண்டும். ஈ, கொசு போன்றவை நம் வீட்டை அண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
வருமுன் காத்தல் :
பருவநிலைகள் மாறும்போது அதற்கேற்ற உணவுகளை உண்ணுதல் அவசியம். கோடைக்காலத்தில் பழச்சாறுகளை அருந்துதல், மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்கவும், காய்ச்சல் வராமல் இருக்கவும் நம் தமிழ் மருத்துவ முறைகளை அறிந்து அவற்றை பின்பற்றுதல் வேண்டும்.
சிறுவர்களுக்கான ஆரோக்கிய உணவுகளை அறிந்து அவற்றை கொடுக்க வேண்டும். “நோய்நாடி நோய்முதல் நாடி” என்ற வள்ளுவரின் வாக்கின்படி நோயை அறிந்து அவை முதிர்ந்து நம்மைத் துன்பப்படுத்துவதற்கு முன் அந்நோயை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும். இவையே வருமுன் காத்தல் ஆகும்.
உணவும் மருந்தும் :
உணவு வகைகளே நமது உடல் நலத்திற்கு அடிப்படை என்று கூறினால் அது மிகையாகாது. உணவைத் தகுந்த நேரத்தில் ஏற்ற அளவில் உட்கொள்ள வேண்டும். காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது.
மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும்.
உடற்பயிற்சியின் தேவை :
நாம் நோயின்றி வாழ உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ‘ஓடி விளையாடு பாப்பா… நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று பாடிய பாரதியார், உடற்பயிற்சியைச் சிறுவயது முதலே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். நாம் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் சுறுசுறுப்புடனும், மூளை புத்துணர்ச்சியுடனும் காணப்படும். தவிர உடற்பயிற்சி பல நோய்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது என்பதே அறிவியல் கண்ட உணவாகும். இதனைக் கவிமணி,
“காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவனே!
என்கிறார்.
முடிவுரை :
நோயற்ற வாழ்விற்குச் சுகாதாரம் அவசியம். ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்ற ஔவையின் வாக்குப்படி நமக்குக் கிடைத்த இவ்வுடலை நோயின்றி வைத்திருப்பது நம் கடமையாகும்.
மொழியோடு விளையாடு
கீழ்க்காணும் படம் சார்ந்த சொற்களை எழுதுக.
1. பட்டை
2. வசம்பு
3. இலவங்கம்
4. அன்னாசிப்பூ
5. மிளகு
6. ஓமம்
7. சீரகம்
8. கருஞ்சீரகம்
9. சோம்பு
10. பெருங்காயம்
11. சித்தரத்தை
வட்டத்திலுள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக
1. முயற்சி திருவினை ஆக்கும்.
2. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
3. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
4. சுத்தம் சோறு போடும்.
5. வருமுன் காப்போம்.
6. அறிவே ஆற்றல்
7. பருவத்தே பயிர்செய்.
8. பசித்துப் புசி.
9. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.
10. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்…
1. காலை மாலை உடற்பயிற்சி செய்வேன்.
2. உரிய நேரத்தில் உறங்கச் செல்வேன்; உரிய நேரத்தில் விழித்தெழுவேன்.
கலைச்சொல் அறிவோம்
1. நோய் – Disease
2. மூலிகை – Herbs
3. சிறுதானியங்கள் – Millets
4. பட்டயக் கணக்கர் – Auditor
5. பக்கவிளைவு – Side Effect
6. நுண்ணுயிர் முறி – Antibiotic
7. மரபணு – Gene
8. ஒவ்வாமை – Allergy
கூடுதல் வினாக்கள்
நிரப்புக :
1. பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் …………….. எனப்படும்.
2. எச்சம் ……………… வகைப்படும்.
3. பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ………………..
4. பெயரெச்சம் ……………….. காலத்திலும் வரும்.
5. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் ………………… பெயரெச்சம்.
6. பெயரெச்சம் ………………. வகைப்படும்.
7. செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் ……………….. பெயரெச்சம்.
8. வினையைக் கொண்டு முடியும் எச்சம் ………………….
9. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் ……………….. வினையெச்சம்.
10. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் …………………..
Answer:
1. எச்சம்
2. இரண்டு
3. பெயரெச்சம்
4. மூன்று
5. தெரிநிலை
6. இரண்டு
7. குறிப்புப்
8. வினையெச்சம்
9. தெரிநிலை
10. குறிப்பு வினையெச்சம்
விடையளி :
Question 1.
எச்சம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
எச்சம் இரண்டு வகைப்படும். அவை பெயரெச்சம், வினையெச்சம் என்பனவாம்.
Question 2.
பெயரெச்சம் சான்றுடன் விளக்குக.
Answer:
பொருளைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்.
(எ.கா) பாடிய பாடல் – இறந்தகாலப் பெயரெச்சம்
பாடுகின்ற பாடல் – நிகழ்காலப் பெயரெச்சம்
பாடும் பாடல் – எதிர்காலப் பெயரெச்சம்
Question 3.
தெரிநிலை பெயரெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.
(எ.கா) எழுதிய கடிதம்.
Question 4.
குறிப்புப் பெயரெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
(எ.கா) சிறிய கடிதம்.
Question 5.
வினையெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) படித்து முடித்தான்.
Question 6.
தெரிநிலை வினையெச்சம் என்றால் என்ன?
Answer:
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) எழுதி வந்தான்.
Question 7.
குறிப்பு வினையெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) மெல்ல வந்தான்.